திருச்சி மாவட்டம் முசிறி வேப்பந்துரை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆனார். கர்ப்பத்தை கலைப்பதற்காக முசிறி மண்ணச்சநல்லூர்-துறையூர் சாலையில் உள்ள ராஜி என்ற போலி பெண் மருத்துவரை அந்த இளம்பெண் கடந்த மாதம் 18ஆம் தேதி அணுகியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு, போலி மருத்துவர் ராஜி கருக்கலைப்பு செய்தார். ஆனால் கருக்கலைப்பு சரியான முறையில் செய்யவில்லை. இதனால் அந்த இளம்பெண் நோய் தொற்று ஏற்பட்டு வயிற்று வலியால் துடித்தார். இதைத் தொடர்ந்து திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கும் அவரது நிலை மோசமானதால் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னரும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் கருக்கலைப்பு செய்த போலி மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல் ராஜி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவரான ராஜி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.