பெரம்பலூர் மாவட்டம் புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முருகையன் (48). இவருக்கு இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். வாடகை ஆட்டோ எடுத்து ஓட்டிவரும் இவர், மிகவும் ஏழ்மையான சூழலிலேயே தன் குடும்பத்தை நடத்திவந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது ஆட்டோவில் பயணித்த பயணி மீது சந்தேகமடைந்து, அந்தப் பயணியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
காவல் துறையினரின் விசாரணையில், அந்நபர் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 16 லட்சத்தை கொள்ளையடித்த திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் முருகையாவின் நற்செயலை பாராட்டி திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ், 10 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டி கெளரவித்தார். மேலும், ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் பணியாளர் சங்கத்தினரும் ரூ.5 ஆயிரம் வழங்கி கெளரவித்தனர்.

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் முருகையாவை பாராட்டி வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி திருவண்ணாமலையில் திமுக சார்பில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழாவில் ’சிறந்த ஆட்டோ ஓட்டுநர்’ விருதும், பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது.