டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ஜூலை 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது வழக்கம்.
அந்தவகையில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார்.
மேட்டூர் அணையில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீரானது இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. முக்கொம்பு அணையில் உள்ள 47 மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் மலர்கள், நெல்மணிகளைத் தூவி மேட்டூரில் இருந்துவந்த தண்ணீரை வரவேற்றனர். முக்கொம்பில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தற்போது கம்பரசம்பேட்டை தடுப்பணையில்வந்து வழிந்தோடி கல்லணை நோக்கிச் செல்கிறது. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது.