திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும். வகுப்பறைக்கு வந்தே மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது. தேர்வு தேதியை மாநில அரசே முடிவு செய்யும். சுகாதாரத்துறை அறிவிப்பின்படியே தேர்வு தேதி இறுதி செய்யப்படும்.
சென்னையில் மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் வந்துள்ளது. இந்த புகார் குறித்து குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் நிரூபணமானால் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட மாட்டார்கள். விருப்பமுள்ள ஆசிரியர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபடலாம்.
மீண்டும் பப்ஜி விளையாட்டு ஆன்லைனில் தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார். கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் பார்வையிட்ட போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.