திருச்சி: பாரதிய கிசான் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே உள்ள விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், தேசிய செயலாளர் பெருமாள், மாநில அமைப்பு செயலாளர் குமார், மாநில பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, மாநில செய்தி தொடர்பாளர் வீரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், புதிய வேளாண் சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளில் பதிவு செய்திருக்க வேண்டும். அந்நிறுவனங்களுக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும். விவசாயம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மாவட்ட அளவில் தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
புதிய வேளாண் சட்டங்களை தமிழ்நாடு அரசு ஆதரிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இச்சட்டங்கள் குறித்து வேளாண் துறை வாயிலாக மாவட்டந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். தமிழ்நாட்டைத் தாக்கிய நிவர் புயலில் சேதமடைந்த பயிர்களுக்கு, பயிர் வாரியாக நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை அளவை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ததுடன் தமிழ்நாடு பருவ நிலையை கருத்தில் கொண்டு 22 விழுக்காடு ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட்ட மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாடு பருவ நிலையை கருத்தில் கொண்டு, கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை, 17 விழுக்காட்டிலிருந்து, 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, தேசிய அளவில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் விவசாய பிரிவான பாரதிய கிசான் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக காத்திருப்புப் போராட்டம்!