அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பணிக்கான ஆய்வு, தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொருளாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான மனோகரன் பேசினார்.
அதில், “அதிகாரம், பணம், பதவி, டெண்டர், ஆறு மற்றும் குளம் தூர்வாருதல், நியாயவிலைக் கடையில் வேலை போன்ற பல காரணங்களால் பலர் அதிமுகவில் உள்ளனர். அவர்கள் அங்கிருந்து தினமும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளுடன் தொடர்புகொண்டு பேசிவருகின்றனர். அவர்கள் கேட்பதெல்லாம் சசிகலா எப்போதும் சிறையிலிருந்து வெளியே வருவார் என்றுதான் கேட்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நம்பியிருந்தால் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று அதிமுகவினர் நினைக்கத் தொடங்கிவிட்டனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தலைமைக்குப் பஞ்சம் இருக்கிறது.
ஆளுமைமிக்கத் தலைமை இல்லை. அந்த இடத்தை டிடிவி தினகரன் மட்டுமே நிரப்புவார். ஓ. பன்னீர்செல்வம் அமைச்சராகவும், முதலமைச்சராக ஆனதற்கு சசிகலாவும், டிடிவி தினகரனும்தான் காரணம். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உருவாக்கும் நிலை தற்போது நிலவுகிறது.
திருச்சி மாவட்ட அதிமுகவில் இரண்டு அமைச்சர்கள், 15 முன்னாள் அமைச்சர்கள், 15 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கின்றனர். எனினும் இவர்களைத் தவிர்த்துவிட்டு கரூர், தஞ்சை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் திருச்சி மாவட்டத் தேர்தல் பொறுப்பாளராக நியமனம்செய்யப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் திருச்சியிலுள்ள அமைச்சர்களுக்குத் தேர்தலைச் சந்திக்கும் தகுதி இருப்பதாக எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் கருதவில்லை. அதிமுகவை அழிக்கும் செயலில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை மீட்டெடுக்கும் இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளது” என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜசேகரன், பெஸ்ட் பாபு, மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க...’விற்பனையின்றி தேங்கிக் கிடக்கும் பத்தமடைப் பாய்கள்’