திருச்சி: லால்குடியில் மக்கள் நல அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வருபவர் பாரதிமோகன். இவர், கிருஷ்ணாபுரம் அணைக் கால்வாய் ஆக்கிரமிப்பை, அகற்றக் கோரிக்கை வைத்து வந்தார். இந்நிலையில், இந்த நடவடிக்கையை நிறுத்தும்படி லால்குடி காவல் ஆய்வாளர் முத்துகுமார் கூறியுள்ளார். ஆனால், இதனை ஏற்க அவர் மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் முத்துகுமார், பாரதிமோகனை சட்டவிரோதமாக சிறைபிடித்ததுடன், ஜாதிப்பெயரை சொல்லி திட்டியுள்ளார். இதையடுத்து, பாரதிமோகன் இது குறித்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார்.
இதனையறிந்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட காவல் துறையினர், பாரதிமோகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதுடன், ஆபாசமாகவும் திட்டியுள்ளனர். அத்துடன், வெற்று காகிதத்தில் கையெழுத்தையும் பெற்றுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணையத்தின் நடவடிக்கை
இதனால், லால்குடி காவல் ஆய்வாளர் முத்துகுமார், உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், காவலர்கள் சுரேஷ் பாண்டியன், குழந்தைவேலு ஆகியோருக்கு எதிராக பாரதிமோகன் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன், பாதிக்கப்பட்ட பாரதிமோகனுக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.
இதில், 2 லட்சம் ரூபாயை காவல் ஆய்வாளரிடம் இருந்தும், மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயை தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் காவலர்கள் சுரேஷ் பாண்டியன், குழந்தைவேலுவிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டார். மேலும், ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தார்.
இதையும் படிங்க: சாதிய வன்கொடுமை: சிறுநீர் கழிக்கச் சென்ற இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!