விழுப்புரம்: ஆதி திராவிட நலத்துறை அலுவலர் சரவணகுமார் என்பவர், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி அவரது காரில் ரூ.40 லட்சம் பணத்துடன் சென்று கொண்டிருப்பதாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரகசியத்தகவலின் அடிப்படையில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் தேசிய நெடுஞ்சாலை கெடிலம் அருகே விரைந்து சென்று, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணகுமாரின் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை: கைப்பற்றப்பட்ட 40 லட்ச ரூபாய் பணம் மற்றும் அவர் பயணம் செய்த வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, எதற்காக இவ்வளவு பெரிய தொகையை எடுத்துச் சென்றார்? இந்தப் பணம் யாருடையது; எதற்காக இந்தப் பணம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், துணை காவல்கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு அலுவலரின் வாகனத்தில் 40 லட்ச ரூபாய் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட நிகழ்வு விழுப்புரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரே ஆட்டோவில் 25 குழந்தைகள் - பள்ளி நிர்வாகத்தை கண்டிக்கும் பெற்றோர்