திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் பிஏபி சட்ட விதிகளின்படி ஏழுநாள் பாசனம் ஏழுநாள் அடைப்பு என மாதத்திற்கு இரண்டு சுற்று தண்ணீர் விட வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் 14 நாள்களுக்குப் பதிலாக மூன்று நாள்கள் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மீதமுள்ள 28 நாள்கள் அடைக்கப்படுகிறது.
புன்செய் விவசாயம் செய்யும் அளவிற்கு விவசாயிகள் திட்டமிடப்பட்டுள்ள சூழலில் வெள்ளகோவில் கால்வாய் மூலம் தற்போது தங்களுக்கு கிடைக்கும் நீரை வைத்து ஆடு மாடுகளுக்கான தண்ணீர் தேவையைக்கூட பூர்த்திசெய்ய முடியவில்லை எனவும், ஆரம்ப காலத்தில் சட்ட விதிகளின்படி ஏழு நாள் பாசனமும் ஏழு நாள் என தொடர்ந்து 135 நாள்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.
அப்போதைய நிலையில் தண்ணீர் கடைமடை கிராமங்களுக்குக்கூட தட்டுப்பாடின்றி கிடைத்தது. ஆனால் தற்போது திருமூர்த்திமலை வாய்க்கால் தொடக்கத்திலேயே பல்வேறு இடங்களில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால் கடைமடை விவசாயிகளுக்கு சிறிதளவுகூட தண்ணீர் கிடைப்பதில்லை. இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இன்று (நவ. 17) வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த விவசாயிகள் தங்களுக்கு ஆரம்பகால ஏழு நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும் தண்ணீர் திருட்டைத் தடுத்து கடைமடை கிராமங்களுக்கும் நீர் சென்றடைய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்துசென்றனர்.