திருப்பூர்: அமராவதி அணை 85 அடியை எட்டியதைத் தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் அமராவதி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. பின்னர் நேற்று (டிச., 6) ஆற்றில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அந்த வெள்ளம் தாராபுரம் பகுதியை இன்று வந்தடைந்தது. ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டவாறு பாய்ந்து ஓடியதை அறிந்த தாராபுரம் பகுதி பொதுமக்கள், இன்று காலை முதல் ஆற்றிற்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
தாராபுரத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம், பழைய மற்றும் புதிய ஆற்றுப்பாலம் ஆகியவற்றின் மீது நின்று வெள்ளோட்டத்தை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கண்டுகளித்தனர். மேலும் சிலர், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு ஆனந்த கூத்தாடினர்.