துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சாம்குமார் (24). இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் இருசக்கர வாகனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து வடபாகம் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக மோட்டார் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் நிற்காமல் செல்ல முயன்றனர். இதைத்தொடர்ந்து அந்த இளைஞர்களைக் காவல் துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி, பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் (23), கால்டுவெல் காலனி மணி(23), ஆசிரியர் காலனியைச் சேர்ந்த சரவணன் (22) ஆகியோர் மோட்டார் இருசக்கர வாகனத்தைத் திருடியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து மோட்டார் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கைதான சந்தோஷ், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டுத் தாக்குதலில் காயமுற்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
அப்போது, காயமுற்றவர்களுக்கு ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினியிடம், 'நீங்கள் யார்' எனக் கேட்டார். அந்த விவகாரம் அப்போது பெரிதும் பேசப்பட்டது.