தூத்துக்குடி: கரிசல் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் அவரது உடலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் கி. ராஜநாராயணன் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவருக்கு சிலை வைக்கவும், நினைவு மண்டபம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து எழுத்தாளரின் உடல் புதுச்சேரியிலிருந்து நேற்றிரவு அவருடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து அவருடைய பூர்வீக வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. ராஜநாராயணனின் உடலுக்கு திமுக எம்.பி., கனிமொழி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இன்று(மே 19) அவரது உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
அவரது உடலுக்கு திமுக எம்.பி., கனிமொழி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், எம்.எல்.ஏக்கள் அப்துல் வஹாப், சதன் திருமலைக்குமார், ரகுராமன் மற்றும் துரை வைகோ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து ராஜநாராயணனின் உடலுக்கு காவல் துறையின் சார்பில் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடல் சமுதாய வழக்கத்தின்படி தகனம் செய்யப்பட்டது.