தூத்துக்குடி: காந்தி ஜெயந்தியையொட்டி கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் உள்ள காதி கிராப்ட் விற்பனை அங்காடியில் கதர் விற்பனையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கிவைத்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், "மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் கதர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பண்டிகை, விழாக்காலங்களில் 30 விழுக்காடு தள்ளுபடியுடன் காதிகிராப்ட் கடைகளில் கையால் நெசவு செய்யப்பட்ட துணிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
சென்ற ஆண்டு காதி கிராப்ட் கடைகள் மூலமாக 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அளவுக்குப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த இலக்கு இந்த ஆண்டு ரூ.80 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்று காந்தி ஜெயந்தியையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபா கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு கிராமத்தின் முன்னேற்றத்திற்கான தீர்மானங்களை இயற்ற முன்வரவேண்டும்.
இந்தக் கூட்டத்தின் வழியே அனைத்து கிராமங்களிலும் 100 விழுக்காடு தடுப்பூசி எடுத்துக்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 32 கிராம பஞ்சாயத்துகள் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய கிராமங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுதவிர காயல் பட்டினம், திருச்செந்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட நகர்ப் பகுதிகளிலும் மிக அதிகமான விழுக்காடு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் 62 விழுக்காடு பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் கிராம சபா கூட்டத்தில் வாயிலாகவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதை நிறைவேற்றும் பட்சத்தில் நகர்ப்பகுதிகளில் 70 முதல் 80 விழுக்காட்டினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய நிலையை எட்ட முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 தவணை கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தும் வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடரும்" என்றார்.
இதையும் படிங்க: 'இனி பழைய துரைமுருகனைப் பார்க்கப் போறீங்க; நான் உங்களுடைய அமைச்சர்!'