தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், 9ஆவது சரக்கு தளத்தில் 89 ஆயிரத்து 777 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பலைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. பனாமா நாட்டுக்கொடியுடன் கூடிய எம்.வி.என்பிவேர்மீர் என்ற இக்கப்பல் 234.98 மீட்டர் நீளமும், 38 மீட்டர் அகலமும் மற்றும் 14.16 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டதாகும். இக்கப்பல் அமெரிக்க நாட்டிலுள்ள பால்டிமோர் என்ற துறைமுகத்திலிருந்து 89 ஆயிரத்து 777 டன் நிலக்கரியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு எடுத்து வந்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த ஜூலை 25 ஆம் தேதியன்று எம்.வி. காமாக்ஸ் எம்பரர் என்ற கப்பலின் மூலம் 85 ஆயிரத்து 224 டன் சுண்ணாம்புக் கல் இத்துறைமுகத்தில் கையாளப்பட்டதே சாதனையாகக் குறிப்பிடப்பட்டிருந்து. இக்கப்பல் சரக்குதளம் 9இல் நாள் ஒன்றுக்கு 50,000 டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட மூன்று நகரும் பளுதூக்கிகள் மூலம் கையாளப்படுகிறது. இக்கப்பலின் மொத்த சரக்குகளும் இன்று இரவு 10மணிக்குள் கையாளப்படும். வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் 2019 வரை 5.26 மில்லியன் டன் நிலக்கரியைக் கையாண்டுள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ராமச்சந்திரன் இந்த சாதனையைப் படைக்கக் காரணமாக இருந்த அனைத்துத் துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், பளுதூக்கி இயந்திரம் இயக்குபவர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் பாராட்டியதுடன், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்ந்து 14 மீட்டர் மிதவை ஆழமுடைய பெரிய கப்பல்களைக் கையாளுவதினால் தென்தமிழகத்தின் சர்வதேச கடற் வாணிபத்தின் அடுத்தநிலைக்கு முன்னேறியுள்ளது என்று கூறினார்.
இதையும் படிங்க:
தூத்துக்குடி துறைமுகம் சரக்கு கையாள்வதில் புதிய சாதனை!