தூத்துக்குடி: மானாவாரி பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என்று விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
மழையால் சேதமடைந்த மானாவாரி பயிருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் இழப்பீடு தொகை போதாது, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.30,000 இழப்பீடு தரவேண்டும், பயிர் காப்பீடு செய்ததற்கான இன்சூரன்ஸ் தொகை அந்தந்த ஆண்டுக்கு அந்த ஆண்டின் இறுதியிலேயே சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மழை வெள்ளத்தால் நாசமான பயிர்களை கையில் ஏந்தியவாறு அவர்கள் இழப்பீடு தொகை கேட்டு வலியுறுத்தினர். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கையின்படி இழப்பீடு தொகை பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், முறையான அளவில் பயிர் இழப்பீடு கிடைக்க ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க : பொய் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்