கடந்த 2004 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தோனேஷிய கடற்பரப்பில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது. அதன் தாக்கத்தால் பல்வேறு நாடுகளின் கடலோரப் பகுதிகளை ஆழிப்பேரலை அழித்துச் சென்றது. இதில் தமிழகத்தில் ஏராளமான உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. அந்த தீரா வடுக்களை நினைவு கூறும் 16 ஆம் ஆண்டு இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. திரேஸ்புரம் கடற்கரையில் ஆழிப்பேரலையில் இறந்தவர்களுக்கு மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பேசிய குருஸ்புரம் பங்குத்தந்தை ஜாயினஸ், ” உலக மக்கள் அனைவரும் தங்களின் தேவைக்கு மீறி பொருள் சேர்ப்பதை தவிர்த்து, கடலின் தூய்மை போல நாம் நம் மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளத் தூய்மையே, உலகத்தின் தூய்மைக்கு வழிவகுக்கும். எனவே இந்த சுனாமி நினைவு நாளை இதற்கான முன்னெடுப்பு நாளாக நாங்கள் இட்டுச் செல்கிறோம் ” என்றார்.
தொடர்ந்து பேசிய மீனவர் இசக்கிமுத்து, ” சுனாமி பேரழிவின் போது ஏராளமான படகுகள் சேதம் அடைந்தன. அவை இன்றளவும் அரசால் சரி செய்து தரப்படவில்லை. மேலும் படகு இறங்குதளம், தூண்டில் வளைவு உள்ளிட்ட கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன “ என்றார்.
இதையும் படிங்க: உசிலம்பட்டியில் தமிழி எழுத்துகளுடன் கல்வெட்டு கண்டெடுப்பு!