உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 28ஆம் தேதி யாக சாலை பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. இதனையடுத்து இன்று நள்ளிரவு சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3:30 க்கு விஸ்வ ரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து காலையில் தெய்வானை அம்பாள் தபசுக்கு தெப்பக்குளம் அருகில் உள்ள முருகா மடத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து இன்று மாலை சுவாமி குமரவிடங்கபெருமான் சுப்பிரமணிய சுவாமியாக, தெய்வானை அம்பாளுக்கு முருகா மடத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெறும்.