தூத்துக்குடி மாவட்டம், தபால் தந்தி காலனியைச் சேர்ந்தவர் குலசேகரமோகன். இவர் ஏப்ரல் 20 ஆம் தேதி ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கச் சென்றார்.
அப்போது, அந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ.5 ஆயிரம் ஏற்கனவே இருந்துள்ளது. அந்த பணத்தை எடுத்த குலசேகரமோகன், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபியிடம் ஒப்படைத்தார்.
பின்னர் இது குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஏ.டி.எம்-ல் பணத்தை எடுக்காமல் சென்றவர் தூத்துக்குடி அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த இயுசேபீயுஸ் என்பதும், ஏ.டி.எம் இயந்திரத்தில் பணபரிவர்த்தனை செய்தபோது பணம் வரவில்லையென்று முடிவு செய்துவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் துறை அலுவலகத்திற்கு இயுசேபீயுஸை வரவழைத்து, ஏ.டி.எம்-ல் அவர் எடுக்காமல் விட்டுச்சென்ற ரூ.5 ஆயிரம் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் குலசேகரமோகன் ஒப்படைத்தார்.
பணத்தை எடுத்து மனித நேயத்துடன் உரியவரிடம் ஒப்படைத்த குலசேகரமோகனின் நேர்மையை பாராட்டி காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.