தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு கிராம மக்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர்களிடம் பேசிய குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்த மகேஷ், "100ஆவது நாள் அறவழிப் பேரணியில் முந்தைய அதிமுக ஆட்சியில் தடியடி, துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
அமைச்சரவையைக் கூட்டி சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்காகப் போராடி மக்கள் உயிரிழந்தது தூத்துக்குடியில் மட்டும்தான். சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகையில் 101 பேர் குற்றவாளிகள். ஆனால், காவல் துறையினர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தரும் 500 ரூபாய்க்காக ஆலைக்கு ஆதரவாக மக்கள் யாரும் செல்ல வேண்டாம். மீண்டும் ஆலையைத் திறக்க முயற்சித்தால், இதே குமரெட்டியாபுரத்தில் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம்" என்றார்.
குமரெட்டியாபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், வெளி மாவட்டத்தினர் யாரும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.
விதி முறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2,500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியைச் சுற்றியுள்ள 63 அரசு மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சென்னை அண்ணா நகர் டிஜே பார்ட்டி - போதை அதிகமாகி இளைஞர் உயிரிழப்பு!