தூத்துக்குடி : மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தூத்துக்குடி வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இருப்பிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், கூடுதல் எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக, வெளிமாநிலங்களில் இருந்து, மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் மூலம், பாதுகாப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுவரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இரண்டு பெரிய லாரிகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த இயந்திரங்கள் தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் முன்னதாக வைக்கப்பட்டன. இந்நிலையில், இப்பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் நேற்று (டிச.20) நேரில் ஆய்வுசெய்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் 2,500 கன்ட்ரோல் யூனிட், 2,500 பேலட் யூனிட், 2,500 விவிபேட் யூனிட்கள் வந்துள்ளன. ஏற்கனவே மாவட்டத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 300 கன்ட்ரோல் யூனிட், 700 பேலட் யூனிட், 300 விவிபேட் ஆகிய வாக்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,603 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. மேலும், தற்போது இரண்டாயிரத்து 800க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.