கோவில்பட்டி புதுரோட்டில் அமைந்துள்ள வேலுச்சாமி என்பவரின் முடித்திருத்தும் கடைக்கு புத்தகங்கள் வழங்குதல், மகளிர் சுய முன்னேற்றத்திற்காக தனது சொந்த செலவில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்களை வழங்குதல், சங்கரலிங்கபுரம் மின்னல் தென்றல் பெண்கள் கபடி குழுவினருக்கு கபடி மேட் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “ மத்திய அரசும், மாநில அரசும் கூட்டாட்சிக்கு உதாரணமாக செயல்படுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜிஎஸ்டியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் இன்று வரை தீர்க்கப்படவில்லை. நீட் தேர்வை தமிழ்நாட்டில் திணித்துள்ளனர். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாய சட்டங்கள் மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடியதாக உள்ளது. இத்தனை பிரச்சனைகள் இருக்கக்கூடிய ஒரு சூழலில் எப்படி அது கூட்டாட்சி ஆகும்? எப்படி சிறந்த உதாரணமாகும்?
அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பணத்தைக் கூட தர மறுக்கிறார்கள். பொறியியல் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளை தாய்மொழியில் கொண்டு வருவோம் என மத்திய அரசு கூறி வருவது அவர்களுடைய தாய் மொழியில் கொண்டு வருவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார்களே தவிர, வேறொன்றுமில்லை. அந்தந்த மாநிலங்களில் பேசக்கூடிய அவரவர் தாய்மொழியில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: திமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் அரசியலை மேற்கொள்கிறது - பிரதமர் நரேந்திர மோடி !