தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் கடந்த 11ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தேர்தல் அலுவலர் உடல்நிலை சரியில்லாத காரணமாக நின்று போனது. இதனால் நேற்று மீண்டும் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் கஸ்தூரி, வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இந்நிலையில் அதிமுக முறைகேடாக வெற்றி பெற்றுள்ளதாகக் கூறி திமுகவினர் கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கனிமொழி எம்பி தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய கனிமொழி எம்பி, "கோவில்பட்டி ஊராட்சி மன்றத் தேர்தலில் திமுக ஆதரவு உறுப்பினர்கள் 10 பேரும் அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் இருந்தனர். திமுகவுக்கு பெரும்பான்மை இருந்தும் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்தது ஜனநாயக படுகொலை. இதை கண்டித்து நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்" எனக் கூறினார்.
இந்த நிலையில் திமுகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்திய இடத்தில் மாணவரணி அமைப்பாளர் சரவணன், லட்சுமி ஆகிய இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் கஸ்தூரிக்கு ஆதரவாக, அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதையும் படிங்க: