தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கோவில்பட்டி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள், அமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் திரளாக வந்திருந்தனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு துணை ஆட்சியர் சிம்ரன் ஜித் கலோன் சிங் தலைமை தாங்கினார். திட்ட இயக்குநர் தனபதி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் இதில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இதில், மதிமுக விவசாய அணி சங்க நிர்வாகி நக்கீரன் பேசும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமராத்துப் பணி என்ற பெயரில் குளங்களில் தூர்வாரப்படும் மணலை விவசாயிகளுக்கு இலவசமாகத் தருவதில்லை. மாறாக மணல் கொள்ளை அடிக்கின்றனர். இது குறித்து பலமுறை குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்தும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கு இந்த நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.
தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்தது குறித்த மாதாந்திர ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் என ஆவேசமாகப் பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அலுவலர்கள், இது தொடர்பாக துறைரீதியாக விசாரணை நடத்தப்படும் என உத்தரவாதம் அளித்தார். அலுவலர்களின் பதிலால் அதிருப்தியடைந்த மதிமுக விவசாயிகள் அணி நிர்வாகிகள், அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.
இதேபோல் மக்காச்சோளப் பயிர் இழப்பீட்டு தொகையில் ஊழல் நடந்திருப்பதாகவும் பட்டா நிலத்துக்கு பத்திரமாற்று வழங்குவதற்கு அலுவலர்கள் தாமதம் செய்வதாகவும் கூறி விவசாயிகள், அலுவலர்களை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர் பாதிப்படைந்தது. மக்காச்சோள பயிர் சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் இழப்பை சந்திக்க நேர்ந்தது. இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பயிர் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில், மக்காச்சோளப் பயிர் இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.
ஹெக்டேர் ஒன்றுக்கு ஏழாயிரத்து 410 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், ஐந்து ஹெக்டேர் உள்ள விவசாயிகளுக்கு வெறும் ஏழாயிரம் ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கி முழு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது. இதை வலியுறுத்தி நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளோம்" என்றார்.