இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்து கோவையில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்தின் முக்கிய இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ஆலயங்கள், கோயில்கள், பள்ளிவாசல்கள் என மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தொலைநோக்கியின் மூலம் தீவு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு சில படகுகளில் இருந்த மீனவர்களிடம் சந்தேப்படும்படியான ஏதாவது படகோ, நபர்களோ தென்பட்டால் தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் கூறுகையில், ’தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலையடுத்து, மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை பகுதிகள், கடற்கரையோர கிராமங்கள், திருச்செந்தூர் முருகன் கோயில் உட்பட முக்கிய இடங்களில் கூடுதல் காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியும், வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.