தூத்துக்குடி: மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டத்தினை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி வேல்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகளும், மகளிர் அணி நிர்வாகிகளும், விவசாய பெருங்குடிகள் எனப் பலர் கலந்துகொண்டு கையில் நெல் நாற்றுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் வேளாண் சட்டத்தினை நிறைவேற்றியுள்ளது. இதனை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் இந்த வேளாண் சட்டத்திற்கு, தமிழ்நாடு அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
எனவே, வேளாண் சட்டத்தினை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திவருகிறோம். மத்திய மாநில அரசுகள் வேளாண் சட்டத்தினை திரும்பப் பெறாவிட்டால் அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தீவிரமான போராட்டங்களைக் கையில் எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.