தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலமாக திருநங்கைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பாக்கு மட்டை தயாரிப்பு அலகு தொடக்க நிகழ்ச்சி, நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில், ஆசிரியர்கள் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி அமைச்சர் கடம்பூர் ராஜு கௌரவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் சீர்த்திருத்த நடவடிக்கைகளால் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள், இணைய வகுப்பு என தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது.
திரையரங்குகளில் படங்களை விநியோகம் செய்யப் போவதில்லை என திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூறவில்லை. கியூப் மூலமாக படங்களை திரையிடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து ஏற்கனவே திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
![கடம்பூர் ராஜூ திரையரங்கு திறப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-01-minister-kadampur-raju-teachersday-award-pressmeet-byte-7204870_09092020142204_0909f_01201_169.jpg)
இதன் விளைவாக திரைப்படத் துறையினர் கியூப் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையை வெகுவாக தமிழ்நாடு அரசு குறைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், எழுந்துள்ள பிரச்னையையும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கியூப் நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்.
![கடம்பூர் ராஜூ திரையரங்கு திறப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-01-minister-kadampur-raju-teachersday-award-pressmeet-byte-7204870_09092020142204_0909f_01201_405.jpg)
அதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும், கரோனா ஊரடங்கு தளர்வினை படிப்படியாக தமிழ்நாடு அரசு அமல்படுத்திவரும் நிலையில், தற்பொழுது ஆலயங்கள், கோயில்கள், மசூதிகளில் பொது தரிசனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் தரிசனத்திற்கு அனுமதியளிப்பதில்லை.
ஆனால், திரையரங்குகளில் 3 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து திரைப்படம் பார்க்கவேண்டும் என்பதால் திரையரங்கு திறப்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல்களை எதிர்நோக்கியுள்ளோம். திரையரங்குகள் திறப்பது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்களுடன் மத்திய அரசு காணொலி காட்சி மூலமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து வெளியிடப்படும் வழிகாட்டுதல் அடிப்படையில் திரையரங்கு திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: VPF தொகை செலுத்தக்கோரி தயாரிப்பாளர்களை திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்தக் கூடாது : டி.ராஜேந்தர்