தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.11) மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொள்ள தூத்துக்குடி தபால்தந்தி காலனியைச் சேர்ந்த தெய்வானை என்பவர் வந்திருந்தார்.
தொடர்ந்து அவர், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து மனு அளிக்கையில், அண்மையில் கணவர் இறந்து விட்டதால் குழந்தைகளுடன் கஷ்டப்படுவதாகவும், வருமானத்திற்கு வழிசெய்ய ஏதேனும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இந்த மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி 1 மணி நேரத்திற்குள்ளாக அந்தப் பெண்ணுக்கு, தூத்துக்குடி சிப்காட் நில எடுப்புப் பிரிவு அலுவலக உதவியாளராக தற்காலிகப் பணி ஆணை வழங்கி உத்தரவிட்டார்.
வேலை வாய்ப்புக் கேட்ட பெண்
இச்சம்பவம் குறைதீர் கூட்டத்தில் நெகிழ்வை ஏற்படுத்தியது. இது குறித்து பயனாளி தெய்வானை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 'எனது கணவர் கடந்த மே மாதம் இறந்துவிட்டார். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒருவர் மனவளர்ச்சி குன்றியவர்.
மற்றொருவர் இதய குறைபாட்டுடன் பிறந்த குழந்தை. எனது கணவர் இறந்தபிறகு, வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்தேன். இந்நிலையில் தான், இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் கலந்துகொண்டு என்னுடைய நிலையை விளக்கி, எனக்கு ஒரு வேலை வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
உடனடியாக பணி வழங்கிய ஆட்சியர்
உடனே, எனது மனுவை பரிசீலனை செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மனு அளித்த ஒரு மணி நேரத்தில், தூத்துக்குடி சிப்காட் நில எடுப்புப் பிரிவில் உதவியாளராகப் பணியாற்ற தற்காலிகப் பணி ஆணையை வழங்கியுள்ளார்.
இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது நிலைமையை புரிந்துகொண்டு தற்காலிக பணி ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு அரசுக்கு நன்றி' என்றார்.
இதையும் படிங்க: மகன் கையால் தாலி வாங்கி மறுமணம் செய்து கொண்ட பேராசிரியை!