தூத்துக்குடி: தென்தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முன்னோடியாகத் திகழ்கிறது தூத்துக்குடி மாவட்டம். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் தூத்துக்குடியானது அதிகச் சிறப்பு அம்சங்களைப் பெற்றுள்ளது. இதனைத் துறைமுக நகரம் எனவும், வணிக நகரம் என்றும் அழைப்பர்.
இங்குப் பன்னாட்டு அளவில் ஏற்றுமதி செய்யத்தக்க வகையில் பல தரமான பொருள்கள் இருப்பதால்தான், இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்குத் தனிச்சந்தை மதிப்பு உள்ளது. அதாவது தூத்துக்குடி உப்புக்கெனத் தனிச்சந்தை மதிப்பு உள்ளது. கடல்சார் பொருள்கள் ஏற்றுமதிகள் இங்கு அதிகம் உண்டு.
உணவிலும் சிறந்து விளங்கும் தூத்துக்குடி
அனைத்திலும் தனது தனித்தன்மையைக் கொண்ட தூத்துக்குடி, உணவிலும் சளைத்ததல்ல. இங்குத் தயார் செய்யப்படும் உணவு தின்பண்டங்களில் ஒன்றான மக்ரூன் வகை அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒன்று.
மாவட்டத்தில் பிற பகுதிகளான கோவில்பட்டி, கீழ ஈரால், இடைசெவல், கயத்தாறு, விளாத்திக்குளம், உடன்குடி உள்ளிட்ட இடங்களில் கடலை மிட்டாய், கொய்யாப்பழ சாகுபடி, சேவு மிக்சர், மிளகாய் வத்தல், கருப்பட்டி எனத் தனித்துவம் வாய்ந்த உணவுப் பண்டங்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இங்குக் கிடைக்கும் பொரித்த புரோட்டாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
உணவுப் போட்டிகள்
இந்நிலையில் தொழில் நகரமான தூத்துக்குடி மாநகராட்சியில், அண்மையில் விஐபி பிரியாணி கடை ஆரம்பிக்கப்பட்டது. குடும்ப உணவகமான இந்தக் கடையில், கடந்த சில நாள்களாக, வாடிக்கையாளர்களை உயர்த்திகொள்வதற்கும், அவர்களது உணவின் ருசியை மக்களிடம் கொண்டு சேர்க்கும்விதமாகவும் பல போட்டிகள் வைத்து, அதில் வெற்றிபெறுவோருக்குப் பரிசுகளும் வழங்கிவருகின்றனர்.
இந்தக் கடை தொடங்கியபோது, இரண்டு பிரியாணி வாங்கினால், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று வழங்கினார்கள். அப்போது பலர் இதனைப் பெற்றுச் சென்றனர். தற்போது புதுவிதமாகப் போட்டிகள் வைத்து மக்களை ஈர்த்துவருகின்றனர்.
முன்பதிவு
அதாவது இந்தக் கடையில் கடந்த சில நாள்களாகப் புரோட்டா திருவிழா நடைபெற்றுவருகிறது. இதை முன்னிட்டு கடைக்குச் சாப்பிட வருபவர்கள் யாரேனும் 27 புரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரேமுறையில் சாப்பிட்டு முடித்தால் தங்க நாணயம் பரிசாக வழங்குகின்றனர்.
இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் போட்டி நடைபெறுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக போன் மூலமாகவோ, நேரிலோ வந்து தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்வது அவசியம் என பிரியாணி கடை அறிவித்திருந்தது. இதை அறிந்த இளைஞர்கள் போட்டியில் கலந்துகொள்ள நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்துவருகின்றனர்.
ஜெயிச்சா தங்கக் காசு
போட்டியில் கலந்துகொண்டு நிர்ணயிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டு முடித்தால் வெற்றிபெறுபவர்களுக்கு இலவசமாக ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்குகின்றனர். இதில் வெற்றிபெறுபவர்கள் சாப்பிட்டதற்குப் பணம் செலுத்தத் தேவையில்லை. மாறாக தோற்றுவிட்டால் சாப்பிட்ட உணவுக்கு மட்டும் பணம் செலுத்திவிட்டுச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தூத்துக்குடி மாநகர இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியைச் சுற்றியுள்ள தாளமுத்துநகர், முத்தையாபுரம், கோமஸ்புரம், மாப்பிள்ளையூரணி, ஸ்பிக் நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இளைஞர்கள் ஆர்வமுடன் இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றனர். இதுவரை இந்தப் போட்டியில், பூபாலராயபுரம் பகுதியைச் சேர்ந்த அருண் பிரகாஷ் என்ற ஒருவர் மட்டும்தான் வெற்றிபெற்றுள்ளார் என உணவகம் உரிமையாளர் தெரிவித்தார்.
மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும்
இப்போட்டி குறித்து வெற்றிபெற்ற அருண் பிரகாஷ் கூறுகையில், “தூத்துக்குடியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிரியாணி கடையில் புரோட்டா திருவிழா கொண்டாடுவதையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள உணவுகளைச் சாப்பிடுவதற்காகப் போட்டியில் கலந்துகொண்டேன். எளிதாகப் போட்டியில் வென்றுவிடலாம் என்ற நினைப்புடன்தான் கலந்துகொண்டேன்.
ஆனால் போட்டி தொடங்கி சில மணித் துளிகளிலேயே என்னால் முழுவதையும் சாப்பிட முடியுமா எனச் சந்தேகம் தோன்றியது. இருப்பினும் மன உறுதியுடன் பொறுமையாக இருந்து அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு முடித்து போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டேன்.
தற்பொழுது அறிவித்தபடி ஒரு கிராம் தங்க நாணயத்தையும், அவர்கள் எனக்குப் பரிசாக வழங்கிவிட்டனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உணவு வகைகளும் மிகுந்த சுவையாக இருப்பதனால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் வகையில் உள்ளது” என்றார்.
நியாயமான விலையில் சுவையான உணவு
இதையடுத்து புரோட்டா திருவிழா குறித்து கடை உரிமையாளர் கண்ணா பாண்டியன் கூறுகையில், “நண்பர்கள் ஆலோசனையின்பேரில் கூட்டாகச் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட எங்களது உணவகத்தில், தரமான சுவையான உணவுகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் நாள்தோறும் புதிது புதிதாக உணவு வகைகளை அறிமுகப்படுத்திவருகிறோம்.
மேலும் கடையை விளம்பரப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் புரோட்டா திருவிழா நடத்தி வெற்றிபெறுபவர்களுக்குத் தங்க நாணயம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பல இளைஞர்கள் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்துவருகின்றனர். எங்களது நோக்கம் சுவையான உணவுகளை நியாயமான விலையில் மக்களுக்கு கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே ஆகும். அதற்கு மக்கள் என்றும் பேராதரவு தர வேண்டும்” என்றனர்.