தூத்துக்குடி: தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.
ஆணையத்தின் 36ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரைச் சாலை விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலர் அருணா ஜெகதீசன் தலைமையில் இன்று (பிப்ரவரி 14) தொடங்கியது.
இதில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பொறுப்பிலிருந்த முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய காவல் துறைத் தலைவர் டி.கே. ராஜேந்திரன், அப்போதைய உள் துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி, அப்போதைய கூடுதல் காவல் துறைத் தலைவர் (சட்டம்-ஒழுங்கு) விஜயகுமார் உள்பட ஏழு பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ஒருநபர் ஆணையத்தின் 36ஆவது அமர்வின் முதல் நாள் விசாரணையான இன்று, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விளக்கமளிப்பதற்காக கிரிஜா வைத்தியநாதன் நேரில் முன்னிலையானார். அவரிடம், அருணா ஜெகதீசன் விசாரணை நடத்திவருகிறார்.
கிரிஜா வைத்தியநாதனைத் தொடர்ந்து டி.கே. ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தப்படும் என ஆணையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநபர் ஆணையத்தில் இதுவரை நடந்த 35 கட்ட விசாரணையில் ஆயிரத்து 421 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இதில் ஆயிரத்து 42 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. ஆயிரத்து 516 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - அண்ணாமலை குற்றச்சாட்டு