தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் சங்குமால் காலனியில் சுமார் 40 ஆண்டு காலமாக மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் சங்கு குளித்தல் மற்றும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரேஸ்புரம் ஒட்டியுள்ள பகுதிகளில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்ட விரிவாக்க பணிகளுக்காக மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில் திரேஸ்புரம் சங்குமால் காலணியில் சாலையை ஆக்கிரமித்து வீடுகட்டி உள்ளவர்கள் வீடுகளை உடனே காலி செய்யுமாறு மாநகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்குமால் காலனி மீனவர்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சங்குக்குளி மீனவர்கள் சங்க நிர்வாகி இசக்கிமுத்து தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் , '40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மீனவர்களை இப்பகுதியிலிருந்து காலி செய்யுமாறு மாநகராட்சி அலுவலர்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நோட்டீஸ் வழங்கியது வருந்தத்தக்கது.
உரிய கால அவகாசம் வழங்காமல் உடனே வீடுகளை காலி செய்யச் சொல்வது நியாயமற்றது. இங்கு உள்ள மீனவர்களுக்கு மின்சார இணைப்பு, ரேஷன் கார்டு என அனைத்துமே இந்த முகவரியில் தான் உள்ளது. ஆகவே மாநகராட்சி அலுவலர்கள் இங்குள்ள மீனவர்களை அப்புறப்படுத்துவதற்கு முன்பு அவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்' எனக் கூறினர்.
இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தலைமையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து இதுகுறித்து மனு அளித்தனர்.
இதையும் படிங்க:
தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் மீன்பிடித் தொழில் முடக்கம்