தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எட்டயபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த விளாத்திகுளத்தை சேர்ந்த பெயிண்ட் கடை உரிமையாளர் சண்முகசுந்தரம் என்பவரை சோதனையிட்ட போது, அவரின் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 4 லட்சம் ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர், அதை தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார்.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கரிசல்குளத்தில் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த எட்டயபுரம் தனி வட்டாட்சியர் ராஜசெல்வி தலைமையில் காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதியம்புத்தூரில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த காரில் சோதனை செய்தபோது, அதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான ரெடிமேட் ஆடைகள் உரிய ஆவணங்களின்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதை பறிமுதல் செய்த தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோன்று கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் சாலை தொழிற்பேட்டை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளருமான தமிழ்செல்வன் தலைமையில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிசந்திரன், போலீஸார் ஜான்கென்னடி, சுதன், விஜயராஜ் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, எப்போதும்வென்றானில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி காமராஜ் நகரைச் சேர்ந்த ஞா.புஷ்பராஜ் ஓட்டி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.3 லட்சம் மதிப்புள்ள 127 மூடை நெல் எவ்வித ஆவணங்களுமின்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதுபோல, கயத்தாறு சுங்கச்சாவடி அருகே சேலத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றுகொண்டிருந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் எவ்வித ஆவணங்களுமின்றி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 127 சேலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சேலைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.