தூத்துக்குடி: நாசரேத் திருமண்டல சபைகளுக்கான தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் என திருச்சபை பேராயர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகாத நிலையில் மூன்றாம் கட்ட தேர்தலை பதவியில் இருப்பவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இன்று (ஆகஸ்ட் 30) தேர்தல் நடத்துவதாக புகார் எழுந்தது.
சாலை மறியல்
இதுகுறித்து தகவலறிந்த திருச்சபை எதிர்தரப்பினர் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்ற இடத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்தில் வடபாகம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து நாசரேத் திருமண்டல திருச்சபையின் முதல் கட்ட தேர்தலில் வெற்றி பெற்றவரும், நிர்வாகக் குழு உறுப்பினருமான மோகன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "நாசரேத் மண்டல திருச்சபைகளுக்கான தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் நிலையில், முதல் கட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடாமல், நேரடியாக மூன்றாம் கட்ட தேர்தலை தற்போது பதவியில் இருப்பவர்கள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நடத்தி வருகின்றனர்.
சட்டத்துற்கு புறம்பான தேர்தல்
மேலும், மண்டல திருச்சபை சட்டத்தின்படி நாசரேத் திருமண்டலத்திற்கான தேர்தல், அதன் தலைமையகத்தில் தான் நடைபெற வேண்டும். தலைமையகத்தில் நடத்த முடியாத சூழல் ஏற்படின் நாசரேத் மண்டல எல்லைக்குட்பட்ட பகுதியில் நடத்தலாம் என சட்டம் உள்ளது.
ஆனால் இவ்விரண்டும் இல்லாமல் நாசரேத் மண்டல சபைக்கான தேர்தல் தூத்துக்குடி பள்ளி ஒன்றில் வைத்து நடத்தப்படுவது முற்றிலும் விதிகளுக்கு முரணானது. எனவே இந்த தேர்தல் செல்லாது.
தேர்தல் என்பது அனைவருக்கும் பொதுவானது. தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தற்பொழுது பதவியில் இருப்பவர்களுக்கு அதிகாரத்தினை பயன்படுத்த எந்த உரிமையும் கிடையாது. தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க பேராயர் அறிவுறுத்தலின்படி நிர்வாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் குழு தீர்மானிக்கும்
அந்த குழுவே தேர்தலை நடத்துவது குறித்தும், நிறுத்துவது குறித்தும், தீர்மானித்து முடிவெடுக்கும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் நிர்வாகக்குழுவை கூட விடாமல் எதிர்த் தரப்பினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மூன்றாம் கட்ட தேர்தலை நடத்தி வருகின்றனர்.
எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்காக எங்களில் சிலரை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
விதிகளுக்கு புறம்பாக, இரண்டாம் கட்ட தேர்தலை சந்திக்காமல் மூன்றாம் கட்ட தேர்தல் நடத்துவது தவறானது. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.