தூத்துக்குடி: தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) திரிபாதி இன்று (ஆக்ஸ்ட் .9) பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே மணக்கரைப் பகுதியில் குற்றவாளியைப் பிடிக்க சென்றபோது வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் உடல் உடற்கூறாய்வுக்காக, நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) திரிபாதி, இன்று(ஆக.19) பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது," பணியின்போது காவல்துறையினர் உயிரிழந்தால் எந்தவித பாரபட்சமின்றி நிதியுதவி அளிக்கப்பட்டுவருகிறது. இறந்த காவலரின் உடலில் நாட்டு வெடிகுண்டுகளில் இருந்து வெளியேறிய ஆணிகள் குறித்து உடற்கூறாய்வுக்குப் பின் தான் முழுமையான விபரம் தெரியவரும்.
வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த முதல் நிலை காவலர் குறித்த உருக்கமான தகவல்...!
காவல் துறையினர் பாதுகாப்பிற்கு போதுமான பாதுகாப்பு கருவிகள் கொடுக்கப்பட்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஏதோ ஓரிரு சம்பவங்கள் இவ்வாறு நடந்துவிடுகிறது. குற்றவாளிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டாலும், அதற்கு ஏற்றவாறு, அவற்றை எதிர்கொள்ளும் திறன் சார்ந்த பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்படுகிறது. காவலர்கள் தங்களது உடல் நலனையும், குடும்பத்தினரையும் பாராமல் மக்களுக்கு சேவை செய்துவருகிறார்கள். அவர்களை குறித்து யார் எது சொன்னாலும் நாங்கள் கவலைப்படுவதில்லை" என்றார் திரிபாதி.
முன்னதாக நெல்லை சரக காவல் துணை தலைவர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காவலர் சுப்பிரமணியன் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.