தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மற்றும் காயல்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (ஜூன் 2) உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 294ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரில் இதுவரை இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 157 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் 135 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, இலங்கையில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்தவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேருக்கும் ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.
மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு தென்திருப்பேரையில் அண்மையில் நடைபெற்ற ஒருவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி காரணம் என தெரியவந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என ஏறத்தாழ 50 பேருக்கும், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 9 பேருக்கும் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.