கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கரோனா ஊரடங்கு உத்தரவை மீறி வெளியிடங்களில் சுற்றித் திரிந்த இளைஞர்கள் முதியவர்கள் பெண்கள் உட்பட சுமார் 400 பேரின் இருசக்கர வாகனங்களைப் பேலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி எவ்வித காரணமுமின்றி வெளியிடங்களில் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து வாகனம் மீது கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூர், கொப்பன்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரோனா அச்சத்தையும் மீறி வலம் வந்தால் இனி இருசக்கர வாகனத்தோடு சேர்த்து வாகன ஓட்டிகளுக்கும் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர். தொடர்ந்து போக்குவரத்து காவல்துறை ரெக்கவரி வாகனத்தில் கரோனா குறித்து சினிமா பாடல் பாணியில் வெளியாகியுள்ள விழிப்புணர்வு பாடல் ஒலிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.