திருநெல்வேலி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உடையார்பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்குப் புகார் வந்ததையடுத்து, அப்பகுதியில் காவல் துறையினர் ரோந்துப் பணியிலும் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினரிடம் தகவல் அளித்த நபர்களை மிரட்டுவதற்காக உடையார்பட்டி - மேகலிங்கபுரம் சாலையில் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர், நண்பர்களுடன் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி வந்து மிரட்டும் தொனியில் பேசி வந்துள்ளார்.
மேலும் உடையார்பட்டி - மேகலிங்கபுரம் சாலையில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளை அரிவாள் கொண்டு வெட்டுவது போல மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வருவதையறிந்த மதன் உள்ளிட்ட நண்பர்கள் தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கில் வெள்ளபாண்டி என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயங்கர ஆயுதங்களுடன் சாலையில் சுற்றித்திரிந்து இருசக்கர வாகன ஓட்டிகளை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மதன் உள்ளிட்ட நபர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:பாசனத்திற்காக குமரி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!