திருநெல்வேலி: தருவை அருகே உள்ள தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் பள்ளத்தில் ஆறு பேர் சிக்கிக் கொண்டனர். அதில் முருகன், விஜய், செல்வம் ஆகிய மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் செல்வம் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதி மூன்று பேர் அந்த பள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்க சென்னை அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு நேற்று (மே.15) நள்ளிரவு வந்தடைந்தது. அவர்கள் குவாரியின் உள்ளே சென்று சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தனர்.
மேலும் இடிந்து விழுந்த ராட்சச பாறையை இரும்புராடு கொண்டு இருபுறங்களிலும் கட்டி வைத்து மீட்பதற்கான ஆலோசனை செய்தனர். மேலும் அதிகாலையில் மீட்பு படையினர் குவாரி உள்ளே இறங்குவதற்கு பொக்லைன் எந்திரம் கோரினர்.
தொடர்ந்து அவர்கள் மீட்பு பணியை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் ஆய்வாளர் விவேக் கூறுகையில், "இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு முழு முயற்சி மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் இன்னும் அதிகமான குழுவும் இதில் ஈடுபடுத்தப்படும். அதிகாரிகளின் ஆலோசனைப்படி மீட்பு பணி துரிதமாக நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: கல்குவாரியில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம் - நெல்லை மாவட்ட ஆட்சியர்