திருநெல்வேலியில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று(ஜன 26) வழக்கம்போல் பாளையங்கோட்டையில் வஉசி மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. விழா முடிந்தவுடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்பட அலுவலர்கள் மைதானத்தின் பின்பக்கம் உள்ள தனியார் மண்டபத்தில் காலை உணவு அருந்துவதற்காகச் சென்றுவிட்டனர்.
இந்த சூழ்நிலையில் மைதானத்தின் முன்பக்க நுழைவாயில் அருகே ஒரு பெண் திடீரென குடும்பத்துடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அந்தப் பெண்ணை மைதானத்திற்கு உள்ளே அழைத்துச் சென்று விசாரித்தபோது அந்த பெண் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே இடிந்தகரைப் பகுதியைச் சேர்ந்த லெனிஸ் என்பது தெரியவந்தது.
அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் நேவிசன் சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் லெனிஸின் கணவர் சுமனை அடியாட்களைக் கொண்டு சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது சுமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது கணவரை தாக்கிய அதிமுக நிர்வாகி மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூடங்குளம் காவல் நிலையம் புகார் அளித்தும் காவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என சுமன் மனைவி கூறுயுள்ளார்.
அதேசமயம் நேவிசன் அளித்த புகாரின் பேரில் சுமன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. எனவே தனது கணவரை தாக்கிய நேவிசன் மற்றும் அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து இன்று(ஜன.26) லெனிஸ் குடும்பத்துடன் குடியரசு தின விழா நடைபெறும் மைதானம் அருகே போராட்டம் நடத்தியது தெரிய வந்தது.
தற்போது அலுவலர்கள் அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, லெனிஸ் அங்கிருந்து குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றார்.
குடியரசு தின விழா நடைபெறும் இடத்தில் இளம்பெண் ஒருவர் குடும்பத்தினருடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.