கடந்த மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்தே திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை வெயில் சுமார் 100 டிகிரிக்கு குறையாமல் அடித்து மக்களை வாட்டி வதைக்கிறது. மேலும் கோடைக்கால மழையும் அவ்வப்போது ஆங்காங்கே பலத்த சூறைக் காற்றுடன் பெய்து வீடுகள் மற்றும் வயல்களைச் சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து கால்வாய், ஆறு, குளம் போன்ற அனைத்து நீர் ஆதாரமும் வற்றிக் காணப்படுகிறது.
மேலும் மே மாதம் தொடக்கத்திலிருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாபநாசம் அணை மிகவும் குறைந்தபட்சமாக 9 அடிக்கும் கீழ் குறைந்தது.
இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவ தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டும், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் தங்கள் சிரமங்களை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உறைக்கிணறுகள் அமைக்கப்பட்டு அதிலிருந்து நீரேற்று நிலையங்களுக்கு நீர் அனுப்பப்பட்டுச் சுத்திகரிப்பு செய்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் அனுப்பப்படுகிறது.
ஆனால் சில தினங்களாகத் தாமிரபரணியில் வறட்சி ஏற்பட்டு ஆற்றின் நீரோட்டம் மிகவும் குறைந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள உறைக்கிணறுகளுக்குத் தண்ணீர் செல்லாமல் பல கிராமங்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள உறைகிணறுகளுக்கு ஆற்று நீர் செல்லும் அளவுக்கு ஜேசிபி மூலம் நீரோடை பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆற்றின் நீரோட்டமானது மிகவும் குறைந்த அளவிலேயே உறைகிணறுகளுக்குச் செல்கின்றது. இந்த நிலைமை இன்னும் சில நாட்கள் நீடித்தால் பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக் கூடும்.
"தாமிரபரணி ஆற்றைப் பொறுத்தவரை எந்த ஒரு தூய்மைப்படுத்தும் பணியும் இந்த கோடைக் காலத்தில் எடுக்கப்படவில்லை. மேலும் இங்குள்ள உறைகிணறுகள் சேதமடைந்தும் அதில் உள்ள மோட்டார்கள் பழுது அடைந்த நிலையிலேயே உள்ளது அவற்றையும் இந்த மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இப்படியே போனால் நெல்லை மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை மிகப் பெரிய அளவில் உருவெடுத்து நிற்கும்" என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.