திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தண்ணீருக்கு அடியில் சடலமாக கிடந்த சிறுவனை கரைக்கு எடுத்துச் சென்றனர். விசாரணையில், அந்த சிறுவன் தூத்துக்குடி மாவட்டம் ஜெய்லானி நகரைச் சேர்ந்த அந்தோணி ரமேஷ் என்பவரது மகன் சூர்யா (14) என்பது தெரியவந்தது. கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் அந்தோணி ரமேஷ் தனது மகனை நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்ப நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (டிச.27) அனைவரும் சேர்ந்து ஆற்றில் குளிக்க சென்றபோது, சூர்யா தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுவன் உடலை காவல் துறையினர் மீட்டு உடற்கூராய்வுக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாமிரபரணி ஆற்றில் உரிய பாதுகாப்பு இல்லாமல் அலட்சியமுடன் கண்ட இடங்களில் குளிப்பதால் பலர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க...அதிமுக தலைமையில்தான் கூட்டணி; அயராது உழைத்து ஆட்சி அமைப்போம் - கே.பி.முனுசாமி