நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு பள்ளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர், அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை டவுன் சாஃப்டர் அரசு உதவிபெறும் பள்ளியில் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பள்ளியில் பயின்றுவரும் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் சஞ்சய், பிரகாஷ், அபுபக்கர், அப்துல்லா ஆகிய நான்கு மாணவர்கள் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்களும் அரசு மருத்துவமனயில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதற்கிடையில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அலுவலர்கள் மாணவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நிவாரணத் தொகையைப் புறக்கணித்த பெற்றோர்கள்
தொடர்ந்து அவர்களின் பெற்றோர்களிடம் முதலமைச்சர் அறிவித்த 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்க முயன்றபோது மாணவர்கள் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தற்போது போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உள்ளது.
இதையும் படிங்க:பள்ளி சுவர் இடிந்து விபத்து: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு