திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் குறைந்த விலையில் ராணுவ இருசக்கர வாகனம் விற்பனைக்கு இருப்பதாக புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று வைரலாகப் பரவிவருகிறது.
அதாவது அந்தப் பதிவில் ஒருவர், "எல்லைப் பிரச்னை காரணமாக லடாக் செல்வதால் நான் வாங்கிய புதிய ராணுவ இருசக்கர வாகனத்தைப் பாதி விலைக்குத் தருகிறேன்" என்று கூறி ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்தப் பதிவு தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஆன்லைன் மூலம் தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்வதாக முன்பணம் வாங்கி ஏமாற்றும் கும்பல் தற்போது பொதுமக்களைத் தொடர்புகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். நேரில் பார்த்து சான்றிதழ் சரிபார்த்து வாங்கும் வாகனங்களே பலமுறை ஏமாற்றத்தில் முடிகிறது.
இதுபோன்ற பல புகார்களை நாங்கள் பெற்றுவருகிறோம். அதனால் ஆன்லைன் வாகன கொள்முதலில் கவனமாக இருக்க வேண்டும்.
நம் தேசப்பற்றையும் ராணுவ வீரர்களின் மீதான பெரும் மதிப்பையும் சிலர் மோசடிக்குப் பயன்படுத்தும் முயற்சி கடும் கண்டனத்துக்குரியது. பொதுமக்கள் இந்த மோசடிக்கு இடம் கொடுக்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரை ஒதுங்கிய போதைப் பொருள் : காவல் துறை விசாரணை!