திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை குண்டலகேசி தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (எ) கொம்பையா(40). இவர் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் தேடப்படும் நபராக இருந்தார்.
குறிப்பாக வீடு புகுந்து கொள்ளை அடித்தல், பெண்களை மிரட்டி செயின் பறிப்பு, வழிப்பறி என பல்வேறு திருட்டு வழக்குகள் கொம்பையா மீது மூன்று மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
இது தொடர்பாக மூன்று மாவட்டங்களிலும் 40 பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காவல்துறையினரின் கையில் சிக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததால் கொம்பையாவை பிடிப்பதற்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் 10 ஆண்டுகளாக சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், குற்றவாளி கொம்பையா நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் இசக்கி மற்றும் சேரன்மகாதேவி உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரவு கொம்பையாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து கொம்பையா மீது எந்த காவல் நிலையங்களில் என்னென்ன பிரிவுகளில் வழக்குகள் உள்ளது என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.