திருநெல்வேலி : திருநெல்வேலியில் பெய்யும் தொடர் மழையால் டவுண் உள்ளிட்ட பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் இரண்டாவது நாளாக வடியாமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதற்கிடையில், எதிர்கட்சி எம்எல்ஏ என்பதால் தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணாபேரி, கண்டியபேரி ஆகிய குளங்கள் நிரம்பி ஊருக்குள் நீர் புகுந்துள்ளது.
டவுண் காட்சி மண்டபம் வழுக்கோடை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நேற்று மாநகரில் மழை பெய்யாமல் இருந்து இதுவரை டவுனில் தண்ணீர் வடியவல்லை.
இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டவுண் பகுதி எதிர்க்கட்சி தொகுதி என்பதால் புறக்கணிக்கப்படுவதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதாவது நெல்லை தொகுதிக்குள்பட்ட டவுண் பகுதியில் மழை பாதிப்புகளை பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (நவ.27) நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன், “கடந்த இரண்டு நாள்களாக மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன்.
தொகுதியில் மழை பெய்தால் சந்திக்க உள்ள பிரச்சினைகள் குறித்து முன்கூட்டியே மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் 10 முறைக்கு மேல் மனு அளித்தேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையில் திருநெல்வேலி மற்றும் அதன் அருகாமை மாவட்டமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விவசாயி.. விவசாயி... மழை வெள்ள பாதிப்புகளை டிராக்டரில் வந்து பார்வையிட்ட பாஜக எம்எல்ஏ!