திருநெல்வேலி: டவுன் பாட்ட பத்து பகுதியை சேர்ந்தவர் பேச்சு ராஜா. இவர் குடியிருக்கும் பகுதியில் ஊர் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பண மோசடி நடந்துள்ளதாக பேச்சி ராஜா தரப்பு ஊர் கமிட்டி நடக்கும்போது புகார் முன்வைத்து பேசியுள்ளதாகவும் இதனை தொடர்ந்து அப்பகுதியினர் அவர்களை சமரசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் நடந்த கொடை விழா ஒன்றில் பேச்சி ராஜா தரப்பினர் வரி செலுத்தவில்லை எனவும் அதனை ஊர் பொதுவில் வைத்து கேட்டதாகவும் அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஊர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லையென்றால் ஊரைவிட்டு விலக்கி வைக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஊரை விட்டு விலக்கி வைத்த ஒரு தரப்பு ஏற்றுக்கொண்டதாகவும் மற்றவர்கள் அந்த நிலைப்பாட்டை மறுத்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் ஊர் கமிட்டியின் நிலைப்பாட்டை ஏற்று ஊர்க் கூட்டம் நடைபெற்றபோது பேச்சி ராஜா ஒரு சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வீடியோ காட்சிகளும் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் காவல்துறையினரிடம் அளித்த புகாரை நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது ஒரு தரப்புக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டதாகவும் விசாரணை என்ற பெயரில் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் கூறி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் புகார் அளித்ததுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணைக்கு சென்ற நபர்களில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக மற்றொரு தரப்பு மீது பொய் வழக்கு போட போவதாக மிரட்டிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் காலில் விழும் கலாச்சாரத்தை முடிவு கட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தூங்குறாங்க அரசு மருத்துவமனை ஊழியர்கள்.. இப்படிதான் இருக்கணும்' நோயாளிகள் புலம்பல்