திருநெல்வேலி: பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தைச் சேர்ந்த பூ வியாபாரி முருகேசன் என்பவரது மகன் ஜெகதீஷ் (23).
சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் காரில் சென்ற ஜெகதீஸ் திடீரென காணாமல்போனதாக, அவரது தந்தை முருகேசன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கொன்று புதைக்கப்பட்ட இளைஞரின் உடல்
அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடியைச் சேர்ந்த விஜய் மற்றும் துரைமுருகன் ஆகிய இருவரும் ஜெகதீஷை அழைத்துச் சென்றது தெரியவந்ததது.
இதையடுத்து இருவரையும் பிடிக்க காவல் துறையினர் தூத்துக்குடி சென்றபோது விஜய், துரைமுருகன் இருவரும் வீட்டில் இல்லாததால் அவர்களின் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தனர்.
அப்போது திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜோயல் என்பவருடன் இருவரும் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அதன்பேரில் காவல் துறையினர் ஜோயலைப் பிடித்து விசாரித்தபோது, ஜெகதீஷ் கொல்லப்பட்டு டக்கரம்மாள்புரம் அருகே மண்ணில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன் முன்னிலையில், தோண்டி எடுக்கப்பட்ட ஜெகதீஷின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அங்கேயே திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர். பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நண்பருடன் மதுஅருந்த சென்றதால் நேர்ந்த விபரீதம்..
இதையடுத்து பாவூர்சத்திரம் காவல்துறையினர் ஜோயலை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தூத்துக்குடியைச் சேர்ந்த விஜய்யின்(28) சகோதரிக்கு சிவகாமிபுரத்தில் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், தனது சகோதரியைப் பார்க்க விஜய் அடிக்கடி சிவகாமிபுரம் வந்தபோது, விஜய், ஜெகதீஷ் இருவரும் நண்பராகி உள்ளனர். கடந்த வாரம் சிவகாமிபுரத்தில் கோயில் திருவிழா நடைபெற்றபோது, விஜய் தனது நண்பரான தூத்துக்குடியைச் சேர்ந்த துரைமுருகனுடன் (30) அங்கு சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, விஜய் மற்றும் துரைமுருகன் இருவரும் ஜெகதீஷை காரில் மதுஅருந்த அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்டத் தகராறில் இருவரும் சேர்ந்து ஜெகதீஷை அடித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் துரைமுருகன் தனது நண்பரான டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜோயலைத் தொடர்புகொண்டு கொலை சம்பவத்தைக் கூறியபோது, ஜோயல் ஆலோசனையின் பேரில் ஜெகதீஷ் உடலை டக்கரம்மாள்புரத்துக்கு கொண்டு வந்து, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் தோண்டி புதைத்துள்ளனர்.
பின்னர் ஒன்றுமே தெரியாதது போல் விஜய், துரைமுருகன் இருவரும் நடமாடியுள்ளனர். பிறகு காவல் துறையினர் தேடுவதை அறிந்து இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அதேசமயம் ஜோயல் மட்டும் காவல் துறையினரிடம் சிக்கி உள்ளார்.
மது அருந்திய போது ஏற்பட்டத் தகராறில் இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:பாகிஸ்தான் பயங்கரவாதி டெல்லியில் கைது