திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. இவர் தனது கூட்டாளிகள் மூன்று பேருடன் சேர்ந்து ஆயுதங்களைப் பதுக்கிவைத்திருந்ததாக களக்காடு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் ஏப்ரல் 22ஆம் தேதி மற்றொரு வழக்கில் நாங்குநேரி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறைக்குள் இருந்த சக கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்து மனோ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சாதி மோதல்கள் காரணமாகவே முத்து மனோ சிறைக்குள் வைத்து தாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து அவரது உறவினர்கள், வாகைகுளம் பகுதி மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் தற்போதுவரை முத்து மனோவின் உடலை வாங்க மறுத்து வாகை குளத்தில் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில் உறவினர்களின் சம்மதம் இல்லாமலேயே ஏப்ரல் 24ஆம் தேதி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைத்து முத்து மனோவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. தற்போது அவரது உடல் அங்கேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள், பணியில் அலட்சியமாக இருந்த சிறை அலுவலர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறைத்துறை தரப்பில் சம்பவத்தன்று பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி ஜெயிலர் உள்பட ஆறு பேரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். இருப்பினும் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். எட்டாவது நாளாகத் தொடர்ந்து உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் முத்து மனோ கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும், உயிரிழந்த முத்து மனோ குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று முத்து மனோவின் தந்தை பாபநாசம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதற்கிடையில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 2ஆம் தேதி திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக உறவினர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இதனால் இச்சம்பவத்தில் சுமுகமான முடிவை எட்ட முடியாமல் நெல்லை மாவட்ட காவல் துறையினர் திணறிவருகின்றனர். தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் சாதி மோதல் காரணமாக கைதி கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் சம்பவம் காவலர்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.