தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவால் 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டன. இதையறிந்த மது பிரியர்கள் அன்று, டாஸ்மாக் கடைகள் முன்பு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்.
இதற்கிடையில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் கடை மூடப்படலாம் என்பதால், பலர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அளவுக்கு அதிகமான மதுபானங்களை வாங்கி, பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்யத் தொடங்கினர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே கள்ளத்தனமாக, மது பானங்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்த தாய், மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது முக்கூடல் அருகேயுள்ள மருதம்புத்தூர் மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி, விற்பனை செய்து வருவதாக முக்கூடல் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, பாலகிருஷ்ணன் மணலில் குழி தோண்டி ஏராளமான மதுபாட்டில்களை புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த 50 மது பாட்டில்கள் மற்றும் ஏற்கெனவே மது விற்ற ரூபாய் 5 ஆயிரத்து 750 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர், கள்ளத்தனமாக மது விற்பனை செய்த பாலகிருஷ்ணன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் வள்ளியம்மாள் ஆகிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் சேர்ந்து வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முக்கூடல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: