திருநெல்வேலி: பேருந்து நிலையத்தில் தவறிய 7 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை காவல் ஆய்வாளர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில், மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, தலைமை காவலர் ஜெயசங்கர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 7 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று, தனது பெற்றோரை தவற விட்டு பரிதவித்து நின்றிருந்தை கவனித்த காவல் ஆய்வாளர் அந்த குழந்தையை அழைத்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு குழந்தை கண்ணீர் விட்டு அழுதுள்ளது.
தொடர்ந்து விசாரித்த போது தனது வீடு எந்தப் பகுதியில் உள்ளதென்பதை குழந்தை தெரிவித்தது. அதை வைத்து காவல் ஆய்வாளர் மகாலட்சுமி நடத்திய விசாரணையில், அந்த குழந்தை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தம்பதியின் மகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளர், தலைமை காவலர் இரண்டு பேரும் அந்தக் குழந்தையை வீட்டிற்கே அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில், குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பிய போது, பேருந்தில் குழந்தையை தவறவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே குழந்தையை பெற்றோர் தேடி வந்த நிலையில், தங்களுக்கும் எளிதாக குழந்தையின் பெற்றோரை அணுக முடிந்தது என்று காவல் ஆய்வாளர் கூறினார். காவல் ஆய்வாளரின் இந்த செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.