திருநெல்வேலி: பாளையங்கோட்டை அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கால்நடை டாக்டர் ராஜீவ். இவர் மூலக்கரைப்பட்டி அரசு கால்நடை மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். பணி முடிந்து இன்று (அக். 26) பிற்பகல் அவர் வீடு திரும்பிய போது, அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை உறவினர்கள் பாளையங்கோட்டை மேட்டுத்திடல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜீவ் உயிரிழந்தார்.
குடும்பத்தினர் ஐவரும் டாக்டர்கள்
இந்நிலையில், ராஜீவ் சிகிச்சையில் இருந்தபோது இதய சிகிச்சைக்கான சிறப்பு டாக்டரை அழைத்தும், உரிய நேரத்தில் அவர் வராததால் ராஜீவ் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ராஜீவ்வின் மனைவி, மனைவியின் சகோதரிகள் எனக் குடும்பத்தில் ஐந்து பேர், அவர் அனுமதிக்கப்பட்ட அதே அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
எனவே, மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு உதவி கோரியும் மருத்துவர்களின் அலட்சியத்தால் இந்த உயிரிழப்பு நடைபெற்றிருப்பதால் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து அருகிலுள்ள ஆட்சியர் குடியிருப்பு முன்பு ராஜீவ்வின் உறவுமுறை பெண் டாக்டர் ஒருவர் திடீரென்று தர்ணாவில் ஈடுபட முயன்றார்.
உறவினர் தர்ணா
பின்னர் அங்கிருந்த காவலர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதையொட்டி, ஆட்சியர் குடியிருப்பு முன்பு காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பட்டது.
இது குறித்து, உயிரிழந்த ராஜீவ்வின் உறவினர்கள் கூறும்போது, " மருத்துவமனையில் சேர்த்த பின்பு மருத்துவ மாணவர்களே சிகிச்சை அளித்தனர். அனுபவமுள்ள மூத்த மருத்துவர்கள் வராததால் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தும் அனுமதிக்கவில்லை.
மருத்துவர் தாமதமாக வந்ததால் எனது உறவினர் உயிரிழந்துள்ளார். இதற்கு காரணமான மருத்துவர், மருத்துவ கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினர்.
இதையும் படிங்க: பட்டாசு கடையில் பெரும் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு